சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வெளியே வந்துள்ள சசிகலா, தி.நகரில் உள்ள வீட்டில் தங்கிவருகிறார். பெங்களூருவிலிருந்து சென்னை வந்த சசிகலா, சில நாட்களாக மௌனம் காத்துவந்தார். அதன்பின் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, சில வார்த்தைகளைப் பேசினார். அதனைத் தொடர்ந்து சமக தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அவரை சந்தித்தனர். அதேவேளையில் அவர் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (03.03.2021) மாலை திடீரென சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில், "அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்" எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று அவரது ஆதர்வாளர்கள் அவரது தி.நகர் இல்லத்தின் முன், அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களைப் போலீஸார் அங்கிருந்து கலைந்துசெல்ல அறிவுறுத்தி வெளியேற்றினர்.