உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,902 ஆகவும், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகவும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் முக்கிய நகரங்களில் மக்கள் தீபங்களை ஏற்றினர். தமிழகத்திலும் பல இடங்களில் வீடுகளில் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது.
கரோனா என்ற இருள் அகல தமிழக மக்கள் ஒற்றுமை வெளிப்படுத்தி வீடுகளில் ஒளி ஏற்றினர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் தீப ஒளி ஏற்றினர். நெல்லை, தஞ்சை, நாகை, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பல வீடுகளில் ஒற்றுமை தீபம் ஏற்றப்பட்டது.அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓபிஎஸ் இல்லங்களிலும் அகல் விளக்குகளில் ஒளி ஏற்றினர்.
.