Skip to main content

சேலம் திருமணிமுத்தாறு இன்னும் 2 ஆண்டுகளில் மீட்கப்படும்; அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022
Salem's thirumanimuthaaru will be restored in 2 years; Minister Meiyanathan information!



கழிவுநீர் கலப்பால் மாசடைந்துள்ள சேலம் திருமணிமுத்தாறு இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சனிக்கிழமை (ஜூலை 2), சேலம் உத்தமசோழபுரம் அருகே, திருமணிமுத்தாற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

 

''சேலம் திருமணிமுத்தாறு நிலையைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையைத் தருகிறது. சேலம் மாநகராட்சியின் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதாலும், சாயத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாலும் ஒட்டுமொத்தமாக திருமணிமுத்தாறு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த ஆற்றில் எந்த உயிரினமும் வாழ முடியாது. கழிவுநீர் கலந்ததால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால், நீர்வாழ் உயிரினங்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நதி கடந்து போகும் பாதையோரம் உள்ள மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நிலமும் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி எல்லாம் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

சேலம் மாநகராட்சியில் சுத்திகரிப்பு நிலையமானது 98 எம்எல்டி திறன் கொண்டது. ஆனால் தற்போது 30 சதவீதம் வரைதான் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆற்றில் கலப்பதாக சொல்கின்றனர். புதிதாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க 530 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது. சாயக்கழிவு நீர் கலப்பதில் இருந்து தடுத்து, திருமணிமுத்தாறு முழுமையாக மீட்டெடுக்கப்படும். இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி விட்டோம்.

 

கழிவுநீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு, புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள இடத்தில் மின்சார வசதி இல்லாவிட்டால் சோலார் பிளாண்ட் அமைக்கப்படும்.

 

சேலத்தில், சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றியதாக இதுவரை 45 சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விதிகளை மீறிய சாய ஆலைகள், சலவைத் தொழிற்சாலைகளிடம் இருந்து 1.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது என்பது, தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம். நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக கூடுதல் அதிகாரிகளை நியமித்து கண்காணித்து, அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

குப்பைகளை எரிக்கக் கூடாது. பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதன் மூலம் நச்சு வாயுக்கள் வெளியேறி, புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் 143 குப்பைக் கிடங்குகளில் குப்பைகள் தேக்கம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இவற்றில் 59 கிடங்குகளில் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்துக் கொட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 200 கோடி ரூபாய் சொத்துகள் உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளன. குப்பைகளை எந்தக் காரணம் கொண்டும் எரிக்கக் கூடாது. தரம் பிரித்துக் கொட்ட வேண்டும். ராணிப்பேட்டையில், மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 

தமிழக முதல்வர் அறிவித்துள்ள, எனது குப்பை; எனது பெருமை திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரித்துக் கொட்ட வேண்டும்'' இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

 

ஆய்வின்போது, எம்.பி., பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்