சேலம் சிறை வளாகத்திற்குள் மண்ணுக்குள் புதைத்து வைத்து, கைதிகள் சாராய ஊறல் போட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள் அலைப்பேசி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் கொடுக்கும் வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, சப்போட்டா உள்ளிட்ட பழங்களைக் கொண்டு கைதிகள் சிலர் சாராய ஊறல் போடுவதாகச் சிறை நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் தலைமையில் காவலர்கள், சிறை வளாகம் முழுவதும் தீவிரமாகச் சோதனை செய்தனர். 7வது தொகுப்பு அருகில், மண்ணுக்குள் புதைக்கப்பட்டு இருந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலைக் கைப்பற்றினர். அதில், 2 லிட்டர் தண்ணீர், திராட்சை, சப்போட்டா, வாழைப்பழங்களைப் போட்டு, காற்றுப் புகாதவாறு மூடி, புதைத்து வைத்து ஊறல் போட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சாராய ஊறலை சிறைக்காவலர்கள் கைப்பற்றி அழித்தனர். ஊறல் போட்டது யார்? அவர்களுக்கு காவலர்கள் யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.