சேலத்தில், பெற்ற மகள்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சங்கீதப்பட்டியைச் சேர்ந்த ராஜா கவுண்டர் மகன் பெருமாள் (45). கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து, இரண்டு மகள்களையும் பெருமாள் தன்னந்தனியாக வளர்த்து வந்தார்.
கடந்த 2015ம் ஆண்டு, இரண்டு பெண் குழந்தைகளும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்றனர். அப்போது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த செவிலியர் ஒருவர், இதுகுறித்து சேலத்தில் உள்ள சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார்.
சைல்டு லைன் அமைப்பின் நிர்வாகி சில்வியா மற்றும் ஊழியர்கள், இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல வாரியத்திடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் நலக்குழு நிர்வாகி சேவியர், சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகளின் தந்தை பெருமாளிடம் விசாரித்தார். அவர் பலமுறை தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சேவியர், பெருமாள் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெருமாளை கைது செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை, சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் வியாழக்கிழமை (பிப். 20) தீர்ப்பு அளித்தார். பெற்ற மகள்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெருமாளுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வித்து தீர்ப்பு அளித்தார். அபராதம் கட்டத் தவறும்பட்சத்தில் மேலும் 6 மாதங்களுக்கு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதையடுத்து பெருமாளை, நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.