
சேலம் அருகே, தனியார் பேருந்து நடத்துநர் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய தோழி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலத்தை அடுத்துள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (49). தனியார் பேருந்து நடத்துநர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து தாயுடன் வாழ்ந்துவரும் உமாமகேஸ்வரி (36) என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்துவந்தது.
இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சுப்ரமணி அதே பகுதியில் வேறு வீட்டுக்குக் குடியேறினார்.
அப்போது பழைய வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு புதிய வீட்டில் சேர்ப்பதற்காக செங்காட்டூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நாகராஜனை அழைத்திருந்தார். அவரும் லாரியுடன் வந்து கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றிக்கொண்டு புதிய வீட்டில் கொண்டுசென்று இறக்கினார்.
அப்போது நாகராஜனுக்கும், உமா மகேஸ்வரிக்கும் முதன்முதலாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கவே, சுப்ரமணி வீட்டில் இல்லாத நேரங்களில் எல்லாம் நாகராஜனை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார் உமா மகேஸ்வரி.
இதை அரசல் புரசலாக தெரிந்துகொண்ட சுப்ரமணி, உமா மகேஸ்வரியை கண்டித்துள்ளார். போதாகுறைக்கு, நாகராஜனுக்குத் தெரியாமல் கண்ணன் என்பவருடனும் அவர் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இந்த விவகாரமும் தெரியவந்ததால் சுப்ரமணி, உமாமகேஸ்வரியை அடித்து உதைத்துள்ளார். நாளுக்கு நாள் அடியும் உதையும் அதிகரிக்கவே, இனியும் சுப்ரமணி உயிரோடு இருந்தால் தன்னால் சந்தோஷமாக வாழ முடியாது எனக் கருதிய உமா மகேஸ்வரி, அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.
இதுகுறித்து தன்னுடன் நெருக்கமாக பழகிவரும் நாகராஜன், கண்ணன் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் சுப்ரமணியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து ஜூன் 11ஆம் தேதி இரவு, சுப்ரமணிக்கு சாத்துக்குடி பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்திருக்கிறார் உமா மகேஸ்வரி. அவர் கண் அசந்த நேரம் பார்த்து, ஆண் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்த உமா மகேஸ்வரி, சுப்ரமணியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். ஆண் நண்பர்கள் இருவரும் சுப்ரமணியின் கை, கால்களை அமுக்கிப் பிடித்துக்கொண்டனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த இரும்பாலை காவல் நிலைய காவல்துறையினர், உமா மகேஸ்வரி, அவருடைய ஆண் நண்பர்கள் நாகராஜன், கண்ணன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். காவல்துறையினர் உமா மகேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுப்ரமணியோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும், அதே காலக்கட்டத்தில் உமா மகேஸ்வரிக்கு உள்ளூரில் வேறு சில ஆண்களிடமும் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. லாரி ஓட்டுநர் நாகராஜன், அவருடைய நண்பர் கண்ணன் ஆகியோருடனும் நெருக்கத்தில் இருந்துள்ளார். அவர்கள் இருவரும் சோளம்பள்ளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து, உமா மகேஸ்வரியை அடிக்கடி அந்த வீட்டுக்கு வரவழைத்து நெருக்கமான உறவில் இருந்துள்ளனர்.
இதையெல்லாம் தெரிந்துகொண்ட சுப்ரமணி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார். உமா மகேஸ்வரியை நாள்தோறும் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.
''அழகாக இருக்கும் திமிரில்தானே சுற்றித்திரிகிறாய்...? என்கூட மட்டும்தான் வாழ வேண்டும். இனிமேல் வேறு எந்த ஆம்பிளைக்கூடவாவது உன்னைப் பார்த்தால் அந்த இடத்திலேயே ஆசிட் ஊற்றி கொன்றுவிடுவேன்,'' என்று மிரட்டியுள்ளார்.
அதன்பிறகே சுப்ரமணியை தீர்த்துக்கட்ட முடிவுசெய்து, கொலைத் திட்டத்தை உமா மகேஸ்வரி அரங்கேற்றியுள்ளார்.
சம்பவத்தன்று இரவு சுப்ரமணியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த பிறகும் ஆத்திரம் அடங்காத உமா மகேஸ்வரி, அவருடைய ஆணுறுப்பை நசுக்கியும், தலையணையால் முகத்தை அமுக்கியும் கொன்றிருக்கிறார்.
இந்த விவரங்கள் அனைத்தும் உமா மகேஸ்வரி வாக்குமூலமாக அளித்துள்ளார். இதையடுத்து, கைதான மூவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், உமா மகேஸ்வரி சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும், மற்ற இருவரும் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.