
மேட்டூர் அருகே, அமுதா என்ற அரசுப்பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கரும்புசாலியூர் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 68 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அமுதா என்பவர், இந்தப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் திடீரென்று, மேச்சேரி அருகே உள்ள வன்னியனூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் அமுதாவின் இடமாற்றத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் தங்களின் 50 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி செவ்வாய்க்கிழமை (செப். 6) நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி முன்பு திரண்டு வந்த பொதுமக்கள், ''ஆசிரியர் அமுதாவின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்து, அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் குழந்தைகளின் மாற்றுச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டு வேறு பள்ளிக்குச் சென்று விடுவோம்'' என்றனர். வன்னியனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் சிவக்குமார், அறிவியல் பாட ஆசிரியர் ரவீந்திரநாத் ஆகிய இருவரும் கடந்த ஆக. 26ம் தேதி இடமாறுதல் செய்யப்பட்டனர்.

இதையடுத்து வன்னியனூர் கிராம மக்கள், அந்தப் பள்ளியில் படித்து வந்த 286 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அங்குள்ள கிராம மக்கள் தலைமை ஆசிரியர் சிவக்குமாரை மீளவும் வன்னியனூர் அரசுப் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதுகுறித்து வன்னியனூர், கரும்புசாலியூர் கிராமங்களில் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. வன்னியனூர், கரும்புசாலியூர் பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் பட்டியல் சமூகத்தினர் உள்ளனர். வன்னியனூர் அரசுப் பள்ளியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் மீது சிலர் சாதி ரீதியான பிரச்சனையைக் கிளப்பினர்.
இதையடுத்து அங்கு சர்ச்சை உருவானதால் பள்ளிக் கல்வித்துறை அவரையும், தலைமை ஆசிரியர் சிவக்குமாரையும் இடமாற்றம் செய்தது. இந்நிலையில் வன்னியனூரில் இருந்து பள்ளிப்பட்டி அரசுப்பள்ளிக்கு மாறுதலில் சென்ற ரவீந்திரநாத்துக்கு அங்கும் பட்டியல் சாதி என்பதைக் காரணம் காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் செப். 5ம் தேதி, கரும்புசாலியூருக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளராக செவ்வாய்க்கிழமை இடமாறுதல் செய்யப்பட்டார்.
மேட்டூர், மேச்சேரி சுற்றுவட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர் ரவீந்திரநாத்துக்கு எதிராக புது விதமாக சாதி தீண்டாமையைக் கையில் எடுத்திருப்பதால், பொதுமக்கள், மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
இப்பிரச்சனையில் சுமூகமான தீர்வு எடுக்க முடியாமல் சேலம் மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை திணறி வருகிறது. இத்தனை சர்ச்சைகளுக்குப் பிறகும் கூட வன்னியனூர் மற்றும் கரும்புசாலியூர் கிராம மக்களை அழைத்து பள்ளிக் கல்வித்துறையோ, மாவட்ட நிர்வாகமோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் குழந்தைகளின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளது.