
சேலத்திற்கு மே 24ம் தேதி வருகை தர உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க, சேலம் மாவட்ட திமுக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஓராண்டில், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், ஆவின் பால் மற்றும் பெட்ரோல் விலை குறைப்பு, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின இணைப்பு, மாணவிகளின் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
இதையடுத்து, 'ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை' என்ற பெயரில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வரும் 24ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அவரை வரவேற்கவும், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளிலும் மாவட்ட திமுக நிர்வாகிகள் சுழன்றடித்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் அவசர செயற்குழுக் கூட்டம், கலைஞர் மாளிகையில் புதன்கிழமை (மே 19) நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தில், 'ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை' விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில், ஒரு லட்சம் தொண்டர்களை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
பொதுக்கூட்டம் நடக்கும் அன்று விமானம் மூலம் சேலம் வருகை தரும் முதல்வரை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வரவேற்க தயாராக வேண்டும்.
மத்திய மாவட்டத்தில் உள்ள மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றியம், பேரூர், மாநகர கோட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், இளைஞரணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர் கிளை நிர்வாகிகள் அனைவரும், 'படை பெருத்ததோ... பார் சிறுத்ததோ...' என காண்போர் வியக்கும் வண்ணம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.