
சேலம் மாநகரக் காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு (ஐ.எஸ்.) காவல் ஆய்வாளர் கற்பகம் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகரில் அன்றாடம் நிகழும் சம்பவங்கள், குற்றங்கள் மட்டுமின்றி நிகழப்போகும் சம்பவங்கள் குறித்தும் உளவறிந்து காவல்துறை ஆணையருக்கு நேரடியாக தகவல் அளிப்பதற்கென ஐ.எஸ். எனப்படும் நுண்ணறிவுப்பிரிவு செயல்பட்டுவருகிறது. இப்படியான உளவுப்பிரிவு, அனைத்து மாநகரக் காவல் சரகத்திலும் உண்டு. மாவட்டக் காவல்துறையில் இது, தனிப்பிரிவு (ஸ்பெஷல் பிராஞ்ச்) என்ற பெயரில் இயங்கிவருகிறது.
சேலம் மாநகர நுண்ணறிவுப்பிரிவு பெண் ஆய்வாளர் கற்பகம், கடந்த ஆண்டுகளுக்கும் மேலாக அதே பிரிவில் பணியாற்றிவந்தார். தேர்தல் நேரத்தில் பலர் மாற்றப்பட்டபோதும் கூட, மேலிட செல்வாக்கால் அவர் பணியிட மாறுதல் பெறாமல் அங்கேயே தொடர்ந்துவந்தார். முன்னாள் முதல்வரின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் இடமாறுதலில் இருந்து தப்பித்ததாக அப்போது சலசலப்புகள் எழுந்தன.
இந்நிலையில், ஆய்வாளர் கற்பகத்தை திடீரென்று சேலம் நகர குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இடமாறுதல் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், நுண்ணறிவுப் பிரிவில் மேலும் சில மாறுதல்களும் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நுண்ணறிவுப்பிரிவு எஸ்.ஐ.யாக பணியாற்றிவந்த கருணாநிதி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிறப்பு ஐ.எஸ். பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அன்னதானப்பட்டி காவல் நிலைய தலைமைக் காவலர் வெங்கடேஷ், செந்தில் ஆகியோரும் சிறப்பு ஐ.ஸ். பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிச்சிப்பாளையம் காவல் நிலைய எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், நுண்ணறிவுப்பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவில் பணியாற்றிவந்த ஆய்வாளர் சாந்தா, மாநகரக் கொடுங்குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் மாநகரக் காவல்துறை ஆணையராக நஜ்மல் ஹோடா பதவியேற்ற பிறகு காவல் ஆய்வாளர்கள், எஸ்.ஐ.க்கள், நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர்கள், சிறப்பு எஸ்.ஐ.க்கள் இடமாறுதல் செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது தலைமையக நுண்ணறிவுப் பிரிவிலும் முக்கிய மாறுதல்களைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.