சேலத்தில் தேநீர் கடைக்காரர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார், இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறை விசாரணையில், கஞ்சா போதையில் இருந்தபோது கொலை செய்து விட்டதாக கூறியுள்ளனர்.
மேலும், சேலம் மாநகர பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளதாகவும் ஏற்கனவே மாநகர காவல்துறை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாநகரம் முழுவதும் கஞ்சாவை புழக்கத்திற்கு விடும் குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்க அதிரடி வேட்டைக்கு உத்தரவிட்டார் ஆணையர் செந்தில்குமார்.
சேலம் நகரில் காதர் ஷெரீப் (48), அன்னதானப்பட்டி ரகு (26), கிச்சிப்பாளையத்தில் வெள்ளையன் என்கிற பஞ்சாயத்து (31), கந்தாயி (61) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அம்மாபேட்டையில் ஆகாஷ்குமார் (19), ஹரி (19), விக்கி என்கிற விக்ரம் (19) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து மட்டும் அதிகபட்சமாக 3.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த அதிரடி வேட்டையில் மொத்தம் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.