சேலத்தில், ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மணியனூரில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வாகனங்களுக்கு பதிவெண் இடுதல், புதுப்பித்தல், உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், பர்மிட் வழங்குதல், தகுதிச்சான்று வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சேவைகளை வழங்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து திங்களன்று (ஜன. 11) மாலையில் அந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று (12/01/2021) காலை வரை இந்த சோதனை தொடர்ந்து நடந்தது. இதில், போக்குவரத்து அதிகாரிகள், இடைத்தரகர்கள் சிலரிடம் இருந்து கணக்கில் வராத 1.07 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) சரவணபவன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு பணம் வாங்கிக் கொடுத்த 8 இடைத்தரகர்களும் சிக்கியுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.