சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நவ. 25- ஆம் தேதி வரையிலும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதுவரை 1240 மி.மீ. மழை பதிவாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நவ. 26- ஆம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா கூட்டத்தில் பேசியதாவது, "விவசாயிகள் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் வேளாண் பொருள்களின் உற்பத்தியை உயர்த்திட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுடன், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு பருவ காலத்தில் சராசரியாக 997.90 மி.மீ. மழை பெய்யும். நவம்பர் மாதத்தில் இயல்பான மழை அளவு 942.10 மி.மீ. ஆகும். நடப்பு மாதத்தில் கடந்த நவம்பர் 25- ஆம் தேதி முடிய 1240.20 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது இந்த ஆண்டு இயல்பான அளவைக் காட்டிலும் அதிகளவு மழை பெய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் அக்டோபர் 2021 மாதம் வரை 174583.8 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நெல் தானியம் 124.867 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 38.807 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 142.766 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 177.672 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. யூரியா, டிஏபி, பொட்டாஷ், கலப்பு உரங்களும் தேவையான அளவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
தோட்டக்கலைத்துறை சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள், மலர் ரகங்கள் 156500 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் இதுவரை 65458 ஹெக்டேர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியில் 49.13 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 10.864 மெட்ரிக் டன் பயிர் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
எதிர்பாராத இடர்பாடுகளால் ஏற்படும்பட்சத்தில் நிதியுதவி வழங்கும் வகையில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உளுந்து, தட்டைப்பயறு பயிர்களுக்கு ஏக்கருக்கு 199 ரூபாய் செலுத்தி வரும் நவம்பர் 30- ஆம் தேதி வரையிலும், சோளத்திற்கு 125 ரூபாய் செலுத்தி வரும் டிசம்பர் 15- ஆம் தேதி வரையிலும், ராகி பயிருக்கு 140 ரூபாய், நிலக்கடலை பயிருக்கு 300 ரூபாயும் செலுத்தி டிசம்பர் 31- ஆம் தேதி வரையிலும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.
உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்." இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா கூறினார்.