Skip to main content

மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறப்பு?- இன்று ஆலோசனை!

Published on 16/05/2021 | Edited on 16/05/2021

 

salem district mettur dam water level opening

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று மேட்டூர் அணை. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜூன் 12- ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கலாம் என வேளாண் வல்லுநர்கள் கூறியிருந்தனர்.

 

அதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16/05/2021) காலை 10.00 மணிக்கு விவசாயிகளுடன் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசிக்கிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு மற்றும் துறைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

 

குறுவை சாகுபடி பரப்பு, டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், தூர்வாருதல் உள்ளிட்டவைப் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

 

தற்போது, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.