தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று மேட்டூர் அணை. இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜூன் 12- ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கலாம் என வேளாண் வல்லுநர்கள் கூறியிருந்தனர்.
அதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (16/05/2021) காலை 10.00 மணிக்கு விவசாயிகளுடன் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசிக்கிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு மற்றும் துறைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.
குறுவை சாகுபடி பரப்பு, டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், தூர்வாருதல் உள்ளிட்டவைப் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
தற்போது, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.