Skip to main content

சேலம் அருகே மாயமான கார் டிரைவரை கொன்றது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

salem district car driver incident police investigation

 

சேலம் அருகே மாயமான கார் ஓட்டுநரைக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து கைதான இரு வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள எம்ஜிஆர் காலனி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார். அத்துடன் சொந்தமாக காரும் ஓட்டிவந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா.

 

அக். 16ஆம் தேதியன்று, தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுவிட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றவர், அதன்பின் மூன்று நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

 

இதனால் பதற்றமடைந்த வெண்ணிலா, கணவரைக் காணவில்லை என தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 19ஆம் தேதியன்று காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, ரமேஷ் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். 

 

இந்த நிலையில்தான், மாயமான ரமேஷ் கொலை செய்யப்பட்டதாக ஊருக்குள் திடீரென்று தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தாரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரினர். 

 

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரமேஷ் கொலை செய்யப்பட்டது உறுதியானது. காவல் ஆய்வாளர்கள் குமார், தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

 

தனிப்படையினர், சந்தேகத்தின்பேரில் தாரமங்கலத்தைச் சேர்ந்த சேகர் (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. 

 

கொலை செய்யப்பட்ட ரமேஷும், சேகரும் நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இருவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துள்ளனர். 

 

தொழில் நிமித்தமாக சேகர் வீட்டுக்கு அடிக்கடி ரமேஷ் சென்று வந்துள்ளார். அப்போது சேகருடைய மனைவியுடன் ரமேஷுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சேகருக்கு தெரியாமல் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். 

 

இதையறிந்த சேகர், அவர்கள் இருவரையும் கண்டித்திருக்கிறார். ஆனாலும் ரமேஷ், அவருடைய மனைவியை ரகசியமாக சந்திப்பதை தொடர்ந்தார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சேகர், இதற்கு மேலும் ரமேஷை உயிருடன் விட்டு வைத்தால் தன் குடும்பத்தைச் சிதைத்துவிடுவார் எனக் கருதி, அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். 

 

தனது திட்டத்தை வேறு சில நெருக்கமான நண்பர்களிடமும் கூறி உதவிக்கு அழைத்துள்ளார். அத்திட்டப்படி கடந்த 16ஆம் தேதியன்று, பழைய கார் ஒன்று விற்னைக்கு வந்துள்ளது. அதை நேரில் பார்க்க வருமாறு சேகரின் நண்பர்கள் அழைத்துள்ளனர். 

 

வீட்டிலிருந்து கிளம்பிய ரமேஷை வழியிலேயே 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியுள்ளனர். காரில் செல்லும்போதே அவரை அந்த கும்பல் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளது. 

 

சேகரின் அக்காள் மகன்கள் இரண்டு பேர் பெங்களூருவில் கல் உடைக்கும் தொழிலாளிகளாக உள்ளனர். அவர்களும் அந்தக் காரில் இருந்ததால், சடலத்தைப் பெங்களூருவுக்குக் கடத்திச் சென்று ஏரியில் வீசிவிடலாம் என யோசனை தெரிவித்துள்ளனர். அதன்படியே சடலத்தைப் பெங்களூருவுக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஒரு ஏரியில் வீசிவிட்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சடலம் தண்ணீரில் மிதந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் சடலத்துடன் பெரிய கல்லைக் கட்டி வீசியுள்ளனர். 

 

ஆனால் சடலம் அழுகியதால் கட்டப்பட்டிருந்த கல்லும் நெகிழ்ந்து, தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் சடலம் நீருக்கு மேல் மிதந்துள்ளது. இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் நிலமங்களா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். சடலத்தைக் கைப்பற்றிய நிலமங்களா காவல்துறையினர், உடற்கூறாய்வுக்குப் பிறகு உள்ளூரிலேயே புதைத்துவிட்டனர். 

 

இதையடுத்து ரமேஷ் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட சேகர் (வயது 30), அவருடைய கூட்டாளி நொள்ளையன் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 30) ஆகிய இருவரையும் தாரமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். சேகரின் அக்காள் மகன்கள் இருவரையும் தேடிவருகின்றனர். 

 

மேலும், இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறையினர் நிலமங்களா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, சடலத்தை உடற்கூறாய்வு செய்த அறிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நிலமங்களா காவல்துறையினரும், அங்கு சடலத்தைக் கைப்பற்றிய வழக்கை, தாரமங்கலத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்