salem district attur bus stand prison escape

சேலம் மாவட்டம், ஆத்தூரில், கழிப்பறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கைதி ஒருவர், பாதுகாப்புக்கு உடன் வந்த தலைமைக் காவலரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சக்கரை என்கிற சக்கரவர்த்தி (23), சவுந்திரராஜன் (27) ஆகிய இருவரும் வேறு ஒரு வழக்கில் நாமக்கல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் எஸ்ஐ சுப்ரமணியம் தலைமையில் ஏட்டு முகமது முஸ்தபா, சிவராமன் ஆகியோர் ஜன. 23ம் தேதி நாமக்கல் வந்தனர். இவர்கள் நாமக்கல் சிறையில் இருந்து சக்கரவர்த்தி, சவுந்திரராஜன் ஆகிய இருவரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

ஆத்தூர் பேருந்து நிலையம் வந்த அவர்கள், கள்ளக்குறிச்சி பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது சக்கரவர்த்தி, காவல்துறையினரிடம் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை அருகில் இருந்த கழிப்பறைக்கு தலைமைக் காவலர் (ஏட்டு) முகமது முஸ்தபா அழைத்துச் சென்றார். திடீரென்று கைதி சக்கரவர்த்தி, அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கைதியின் தாக்குதலில் தலைமைக் காவலர் முகமது முஸ்தபாவுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தலைமைக் காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய கைதியைப் பிடிக்க ஆய்வாளர் உமாசங்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.