தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையில் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். கரோனா இரண்டாம் அலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கையும் கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசியையும் தமிழக அரசு பெரும் துணையாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், சேலத்தை அடுத்த காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ட்ரூஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம், சேலம் - சென்னை, சென்னை - சேலம் இடையே இயக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கால், சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை வரும் மே 31ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டிருந்தது.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இதனால், மே 13ஆம் தேதிமுதல் மே 22ஆம் தேதிவரை விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, மே 26ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதிவரை சேலம் - சென்னை இடையேயான விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், "சேலம் - சென்னை இடையேயான விமான சேவை நாளை (01/06/2021) மீண்டும் தொடங்கும். வழக்கமான நேரப்படி சேலத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படும்" என்று சேலம் விமான நிலையம் இயக்குநர் தெரிவித்துள்ளார்.