நீச்சல் போட்டியில் பல சாதனை படைத்துள்ள கே.எஸ். விஸ்வாஸின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'அரபி’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளார். கே.எஸ். விஸ்வாஸ், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 10-வது வயதில் ஒரு விபத்தினால் இரண்டு கைகளையும் இழந்தவர். நீச்சலின் மீது ஆர்வம் உள்ள விஸ்வாஸ் தனது குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியால் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். பின்பு சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறமையால் பல சாதனைகளை படைத்ததுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''எனக்கு உதயநிதி அண்ணா போன்றெல்லாம் நன்றாக நடிக்க தெரியாது. நான் ஒரு ரொம்ப அவரேஜான ஆக்டர். கர்நாடகாவில் இந்தியன் ஸ்விம்மர் இருக்கிறார். அவருக்கு இரண்டு கைகள் இல்லை. அவர் பேரு விஷ்வாஸ். இந்தியா சார்பாக ஐந்தாறு கோல்ட் மெடல் வாங்கி இருக்கிறார். அவர் ஒருநாள் என்னை வந்து பார்த்து 'அண்ணா இந்த மாதிரி ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறேன் அதில் நீங்கள் இந்தியன்ஸ் ஸ்விம்மிங் கோச்சாக வரவேண்டும். ஒரு ஐந்து நிமிடம் எனக்காக நீங்கள் ட்ரெய்னிங் கொடுக்கணும்' என்று சொன்னார். நான் அதற்கு அதற்கெல்லாம் டைம் பத்தாது, நார்மலாகவே என்னை மக்கள் பார்க்க மாட்டார்கள் படமெல்லாம் நடித்தால் பார்ப்பார்களா என்று கேட்டேன். அவர், 'இல்லண்ணா நீங்கதான் நடிக்கணும்' என்று சொன்னார். சரி ஒரு ரூபாய் சம்பளம் கொடுங்கள் எனக் கேட்டு 5 நிமிடம் நடித்திருக்கிறேன்.
அந்த ஒரு ரூபாயைக் கொண்டு போய் போன வருஷம் ஐயப்பன் உண்டியலில் போட்டு விட்டேன். ஏனென்றால் அது எனக்கு கிடைத்த ஊதியம் கிடையாது போலீஸ் அதிகாரி என்ற பெருமைக்கு கிடைத்த ஊதியம். அதை உண்டியலில் போட்டாச்சு. அந்த படத்தில் கொஞ்சம் டப்பிங் மிஸ் இஸ்யூ. இன்று ரிலீஸ் பண்ண வேண்டிய ட்ரெய்லரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அது ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் பண்ணுவார்கள். ஒரே ஒரு படம், அதில் ஒரே ஒரு சீன், அதில் கையில்லாத நெஞ்சுரம் மிக்க மனிதருக்கு கோச்சாக வருவதற்கு நான் பெருமைப்படுகிறேன். நான் நடித்தால் என் படத்துக்கு நானே டிக்கெட் வாங்கி நானே தான் பார்க்கணும். எனக்கு என்னுடைய நடிப்பு திறமையைப் பற்றி தெரியும். எனக்கு அந்த அளவுக்கெல்லாம் நடிக்க வராது. வர வேலையை செய்வோம்'' என்றார்.