
தமிழ்நாட்டில் கடந்த 2019- ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை ‘உள்ளாட்சி- உரிமைக்குரல்’ நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.