செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு தாயும் சேயும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிறப்பு வார்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், திடீரென அந்த வார்டின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஒரு தாயும் சேயும் இருந்த படுக்கையின் மீது அந்த இடிபாடுகள் விழுந்தன. இருப்பினும் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. உடனே அங்கிருந்த குழந்தைகளை எடுத்துக்கொண்டு அடுத்த வார்டுக்குப் பாதுகாப்பாகச் சென்றுவிட்டனர்.
மேற்கூரை முழுவதுமே சேதமாகியிருக்கும் நிலையில், அதைப் பூசி சரிசெய்யாமல் தெர்மாகோலை வைத்து மறைத்து வைத்துள்ளனர். நேற்று (20.08.2021) இரவு மேற்கூரை இடிந்து தெர்மாகோல் ஷீட்டை உடைத்துக்கொண்டு படுக்கையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எந்தப் பெற்றோரும் அந்த வார்டைப் பயன்படுத்த முன்வரவில்லை. இதுதொடர்பாக மருத்துவமனையின் முதல்வர், பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்டு விரைவில் மேற்கூரை சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.