Skip to main content

'இறந்தபிறகும் சேவை...'-10 ரூபாய் மருத்துவர் அசோகன் மறைவால் பரிதவிக்கும் கிராம மக்கள்!  

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Rs 10 of Dr. Asokan passedaway-Villagers mourn the death

 

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அசோகன். இவர் கடந்த  40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் நகரத்தில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.  இவரை பொதுமக்கள் 10 ரூபா டாக்டர் என்றே அழைப்பார்கள். கடந்த ஆண்டு கரோனா நேரத்தில் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில் இவர் மருத்துவமனையை மூடாமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவரின் சேவையை மதிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

 

இவர் தற்போது மருத்துவம் பார்த்து வரும் எஸ்.பி கோயில் தெருவில் உள்ள இவரது மருத்துவமனைக்கு வெளி மாவட்டம்,  சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏழை மக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு  தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வார்கள்.கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்து வந்தாலும் இதுவரை மருத்துவமனைக்கு சொந்த கட்டடம் இல்லை. வாடகை இடத்திலேயே இவர் மருத்துவம் பார்த்து வந்தார்.

 

மருத்துவமனைக்கு திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தால் அவர்கள் பணம் இல்லை என்று கூறினாலும் கட்டாயபடுத்தமாட்டார். மிகவும் எளிய குணம் கொண்ட இவர் மருத்துவமனையின் ஓரத்தில் செல்லபிராணியாக உள்ள நாய்களை வளர்த்து வந்தார். சில நேரங்களில் மன அமைதிக்கு அதனுடன் நேரத்தை கழிப்பார். சிதம்பரம் பகுதியில் உள்ள ஏழை மக்கள் அதிகம் நாடி செல்லும் மருத்துவராக இவர் பணியாற்றி வந்து அனைவரின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

 

mm

 

இந்நிலையில் மருத்துவர் அசோகன் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரது மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இவரது இறுதி ஊர்வலம் எஸ்.பி.கோவில் தெருவில் உள்ள அவரது மருத்துவமனையிலிருந்து அவரது சொந்தஊரான தையாக்குப்பம் சுடுகாட்டில் வைக்கப்பட்டது. இறந்தபிறகு இவரின் கண்கள் புதுச்சேரி அரவிந் கண் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இருக்கும்போதும் இறந்தபிறகும் சேவை செய்த இந்த எளிய மருத்துவரின்  மறைவு அனைத்து தரப்பு மக்களுக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு மனைவி குமாரி (66), இரு மகன்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்