தென்காசியில் மக்களை அச்சுறுத்தி வந்த ரவுடியை போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ளது பச்ச நாயக்கன் பொத்தை என்ற பகுதி. அதனை ஓட்டியுள்ளது பச்ச நாயக்கன் குளம். சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் அடர்ந்த நிலையில் செடிகள் வளர்ந்து காணப்படும். இந்நிலையில் தென்காசி நகரை சேர்ந்த சாஹுல் ஹமீது என்ற ரவுடியை போலீசார் தேடி வந்தனர். மான் கொம்பு வைந்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த சாஹுல் ஹமீது அந்த குளத்தில் உள்ள ஒரு பகுதியில் தலைமறைவானான். தொடர்ந்து அங்கு கால்நடை மேய்க்க வரும் நபர்களை மிரட்டுவது, பெண்களை மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் அவனை பிடித்துக்கொடுக்கச் செல்பவர்களை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளான். குளத்தில் முளைத்திருக்கும் அடர்ந்த செடிகளுக்குள் தன்னை மறைத்துக்கொண்டு இருந்ததால் போலீசாருக்கும் ரவுடி சாஹுல் ஹமீதை பிடிப்பது பெரும் சிக்கலாக இருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் தனிப்படை போலீசார் அவனை பிடிப்பதற்காக ட்ரோனை ஏற்பாடு செய்து தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், காவல் சீருடை இல்லாமல் குளத்தில் இறங்கி ட்ரோனின் உதவியுடன் ஒருவழியாக ரவுடி சாஹுல் ஹமீதை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கே தண்ணி காட்டிய ரவுடி கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் பச்ச நாயக்கன் பொத்தை பகுதி மக்கள்.