சிதம்பரம் கிள்ளை பேரூராட்சியில் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி இல்லாததால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறி தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
கிள்ளை பேரூராட்சி பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால் இந்த முறை பேரூராட்சி தலைவர் பதவி இருளர் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளதையொட்டி கிள்ளை பேரூராட்சி பகுதியில் மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது.
இந்த மழையால் சிசில் நகர் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதில் தான் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நடந்து சென்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தொற்று நோய் ஏற்படும் அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார், ஒன்றிய குழு உறுப்பினர் சுனில் குமார் ஆகியோர் பேரூராட்சி அலுவலர்களை சந்தித்துச் சம்பந்தப்பட்ட இருளர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்தப் பகுதியில் மழை நீர் தேங்காத வகையில் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பேரூராட்சி ஊழியர்கள் தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.