திருச்சி விமானநிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் வருபவர்கள் தங்கத்தை அதிக அளவில் கடத்திவருவது தொடர்ந்துவரும் நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று (17.09.2021) வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, தஞ்சாவூரைச் சேர்ந்த விசுவநாதன் என்ற பயணியிடம் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், துபாயில் இருந்து 2 எக்ஸ்பிரஸ் விமானங்கள் நேற்று இரவு திருச்சிக்கு வந்தன. இந்த விமானங்களில் வந்த பயணிகளைக் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ரியாஸ் கான் என்பவர், கீழக்கரை போலீசாரால் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டுவரும் குற்றவாளி என தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் முகமது ரியாஸ் கானை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலறிந்த கீழக்கரை போலீசார் வந்து அவரை கைது செய்தனர்.
மேலும், திருச்சி விமானநிலையத்தில் இருந்து சார்ஜாவிற்குப் புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த நவாஸ்கான் என்பவரிடம் 2.2 லட்சம் மதிப்பிலான ரியால், திருச்சியைச் சேர்ந்த முகமது இசாக் என்பவரிடம் 2.34 லட்சம் மதிப்பிலான ரியால், சென்னை புதூரைச் சேர்ந்த பீர்முகம்மது என்பவரிடம் 2.28 லட்சம் மதிப்பிலான ரியால் என வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணம் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 6.82 லட்சம் ஆகும்.