கரோனா பாதிப்பில் கடந்த மே 1ந் தேதி வரை தமிழகத்தில் மிக குறைந்த அளவான, சுமார் 21 பேர் என்கிற அளவிலேயே கரோனா நோயாளிகள் உள்ள மாவட்டமாக திருவண்ணாமலை இருந்தது. மே 1ந் தேதிக்கு பின்பு இந்த எண்ணிக்கை வேக வேகமாக உயர தொடங்கியது. சென்னையில் இருந்து வந்த தொழிலாளர்கள், பிழைப்புக்காக ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா என சென்றிருந்த தொழிலாளர்கள், ஊரடங்கால் வேலையில்லா நிலை ஏற்பட்டதால், உணவுக்கு வழியில்லாமல் பிறந்த ஊர் திரும்பிவருகின்றனர்.
கடந்த மே 1ந்தேதி முதல் மே 28 ந்தேதி வரையென 12,149 பேர் வருகை புரிந்துள்ளனர். அப்படி வந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைத்து பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மட்டும்மல்லாமல், உள்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த 29ந் தேதி வரை திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், செய்யார் சுகாதார மாவட்டம் ஆகியவற்றிலுள்ள 22,539 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், 22,129 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. 410 பேரின் முடிவுகள் வரவில்லை. பரிசோதனை முடிவுகள் வந்தவர்களில் 352 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் 103 பேர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து வந்த தொழிலாளர்கள், 125 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள், 24 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், 5 பேர் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், 95 பேர் திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிறார்கள் மருத்துவ வட்டாரத்தில். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வளாகம் முழுவதும் நிரம்பிவிட்டதால் செயல்படாமல் பூட்டிவைக்கப்பட்டுள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை தயார் செய்து வைத்துள்ளனர் மருத்துவத்துறையினர்.