தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை கடந்த மாதம் மிகத் தீவிரமாக பரவியது. அதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக முழு ஊரடங்கும் இருந்தது. முதலில் சில அத்தியாவசியக் கடைகளை மட்டும் திறக்க அனுமதி கொடுத்து, தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்துவருவதால், அங்கு குறிப்பிட்ட தளர்வுகளும், தொற்று குறையாத மாவட்டங்களில் சில கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்து தமிழ்நாடு அரசு நேற்று (11.06.2021) புதிய ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்துள்ளது.
கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் செல்ஃபோன், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விற்பனைக் கடைகள் திறக்கலாம் என்றும் டாஸ்மாக் திறக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜவுளித்துறை தொழிலாளர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.
அதில், “தமிழக முதல்வர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் கரோனாவுக்கு எதிராகவும் அதை சுத்தமாக அகற்றிவிடும் அக்கறையுடன் வேகமும் விவேகமும் மின்னலாய் செயல்பட்டுவருவது அனைவரையும் கவர்ந்துவருகிறது என்பதை இந்த உலகமே திரும்பி பார்க்கிறது. கரோனா பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்துவரும் தொழில்களில் ஜவுளித்துறையும் மிகவும் முக்கியமானது.
* எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
* நாங்கள் வியாபாரம் செய்யும் பில்டிங் ஓனர்க்கு வாடகை செலுத்த வேண்டும்.
* மின்சாரக் கட்டணம், டெலிஃபோன் கட்டணம் கட்ட வேண்டும்.
* GST, TDS, PF, ESI வரிகள் கட்ட வேண்டும்.
* நாங்கள் வங்கிகளில் தொழில் செய்ய கடனாக பெற்ற தொகைக்கு EMI மற்றும் வட்டி கட்ட வேண்டும்.
* ஊரடங்கு காலத்தில் கடைகள் ஒரு மாதத்திற்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளதால் கடையில் உள்ள விலையுயர்ந்த ஜவுளிகள் பட்டுச்சேலைகள் இவையனைத்தும் வீணாகியுள்ளன.
* மின்சாதன பொருட்களான A/C, ஜெனரேட்டர், கணினிகள் ஆகியவை பழுதடைந்துள்ளன. இவற்றை சரிசெய்ய வேண்டும்.
ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எண்ணற்ற இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கும் ஜவுளித்துறையினர் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு ஜவுளித்துறையினருக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென தமிழக முதல்வரை இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கிறோம்.
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா கால விழிப்புணர்வாக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வியாபாரம் மேற்கொள்வோம் என்று உறுதி கூறுகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.