கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சந்தேக மரணம் தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மாணவியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் பாப்பா மோகன் மாணவியின் உடற்கூறு ஆய்வு சான்றிதழ் மற்றும் முதல் தகவல் அறிக்கை, பள்ளி வளாகம் மற்றும் உடற்கூறு ஆய்வகம் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம் காவல்துறையினருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் ஒப்படைக்க உத்தரவிட்டதன் பேரில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்று காலை நீதிமன்றத்தில் மாணவியின் தாய் செல்வி தற்பொழுது ஆஜராகியுள்ளார். அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினர் ஆஜராகாததால், நேரம் குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நீதிமன்றத்தில் காத்திருந்த நிலையில் பின்னர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார். அப்போது தாய் செல்வியும் ஆஜரானார். அவர்கள் கூறியிருக்கும் ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்குவதற்கு கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுவே விரைவாகத்தான் விசாரிக்கப்படுகிறது என நீதிபதி விளக்கம் அளித்தார்.
இதனிடையே நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாணவியின் தாய் செல்வி போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வியிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்வி, “விக்கிரவாண்டி இடைத்தேரலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலம் அவகாசம் குறைவாகவே உள்ளதால் அதற்குள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள் தயாரானால் போட்டியிடுவேன். இல்லையென்றால் போட்டியிடவில்லை” எனக்கூறியுள்ளார்.