சென்னையில் சர்ச்சைக்குள்ளான 'கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங் சாலை' மீண்டும் 'பெரியார் சாலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 'பெரியார் சாலை' என்ற பெயரானது நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் 'கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங் சாலை' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். ''யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். உடனடியாக அதை இணையதளத்தில் இருந்து நீக்கி, ‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி'' என கி.வீரமணி அறிக்கை வாயிலாக கூறியிருந்தார்.
அதேபோல் ''எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க'' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், சாலையிலிருந்த பெயர் பலகையில் 'ஈ.வே.ரா சாலை' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, 'ஈ.வே.ரா பெரியார் சாலை' என மாற்றப்பட்டுள்ளது.