‘கோவிட் 19’ இரண்டாம் அலையின் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சைக்காகத் தேவைப்படுவது ரெம்டெசிவர் டோஸ். அது அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே கிடைப்பது சாத்தியம். அது தவிர்த்து தனியார் மருந்தகங்களுக்குச் சப்ளை கிடையாது. ஆனாலும் ரெம்டெசிவருக்குக் கடும் தட்டுப்பாடுதான். நோயாளிகளுக்கான ரெம்டெசிவரைப் பெறவேண்டுமானால் நோயாளிகளின் ஆதார், தொற்று சோதனைக்கான பாசிட்டிவ் ரிப்போர்ட், சி.டி.ஸ்கேன் அறிக்கை (மூச்சுத்திறன் பற்றியது) மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் ஆகியவைகளின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் தொற்றாளர்களுக்குத் தரப்படுகிறது. அப்படியான டாக்குமெண்ட்களுடன் ரெம்டெசிவரைப் பெற நோயாளிகளின் உறவினர்கள், கூட்டம் கூட்டமாக அரசு மருத்துவமனைகளில் காத்துக்கிடக்கிற நிலை உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து டோக்கன் பெற்றால்தான் மறுநாள் ரெம்டெசிவர் கிடைக்கிற சூழல். ரெம்டெசிவருக்காக மக்கள் அலைபாய்வதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஆயிரம் ரூபாய் விலையுள்ள ரெம்டெசிவரை 20 ஆயிரம், 30 ஆயிரம் என்று கூசாமல் கொள்ளை விலையில் கள்ளச் சந்தையில் விற்கின்றனர். அரசும், காவல்துறையும் முடிந்தவரை கள்ளச்சந்தையில் விற்கிவர்களை வேட்டையாடி வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் கதிரேசன் கோயில் சாலையில் உள்ள காம்ப்ளக்சின் மருந்துகளின் மொத்த விற்பனைக் கடையில் ரெம்டெசிவர் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைக்குத் தகவல் போயிருக்கிறது. அதையடுத்து சுகாதாரத்துறையின் (பணிகள்) இயக்குனர், அனிதா, டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் அந்த மருந்துக் கடையில் அதிரடி சோதனை நடத்தியதில் 42 ரெம்டெசிவர் டோஸ்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதன் உரிமையாளர் சண்முகம் மற்றும் அவரின் சகோதரர் கணேசன் இருவரையும் கைது செய்த போலீசாரின் விசாரணையில், நெல்லை மற்றும் மதுரைப் பகுதிகளிலிருந்து 16 ஆயிரம் விலையில் வாங்கிவந்து குப்பி ஒன்று 20 ஆயிரம், 30 ஆயிரம் என டிமாண்ட்டைப் பொறுத்து விற்றது தெரிய வந்திருக்கிறது.
மேலும், இவர்களிடம் இந்த அளவு விலைகொடுத்து வாங்கிய பாதிக்கப்பட்ட நபர் ஒருவரே நடப்பதை அப்பட்டமாகப் போலீசுக்குத் தெரிவிக்க அதன் பின்னரே இந்த ரெய்ட் நடத்தப்பட்டுக் கைப்பற்றியதாகப் போலீஸ் ஸோர்சுகள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட ரெம்டெசிவரைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார், போலீசாரைப் பாராட்டியதுடன், இந்த ரெம்டெசிவர் வியாபாரம் சங்கிலித்தொடர் போன்று தெரிகிறது. அவர்கள் மதுரைப்பகுதியில் வாங்கியதை அங்குள்ள துறையினரிடம் தெரிவித்ததில் அங்கேயும் ரெம்டெசிவர் கைப்பற்றப்படுள்ளது. மேலும் நெல்லைப் பகுதியையும் கண்காணிக்க ஏற்பாடாகிறது. இனி ரெம்டெசிவர் கள்ளச் சந்தைக்காரர்களின் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார் கடுமையாக.