சரக்கு லாரிகளில் ‘ஸ்பீடு கவர்னர்’ எனப்படும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டு, 80 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக்கூடிய குறிப்பிட்ட ரக லாரிகளில் மட்டும் இத்தகைய கருவியைப் பொருத்துவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சரக்கு லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடு பொருத்துவது கட்டாயம் என போக்குவரத்துத்துறை அறிவித்தது. இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் அண்மையில் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், வேகக்கட்டுப்பாட்டுக் கருவிக்குச் சான்றிதழ் இருந்தால் போதும். 80 கி.மீ. வேகத்திற்குக் குறைவாக இயக்கப்படும் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி தேவையில்லை என சொல்லப்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகக்கட்டுப்பாட்டு கருவியை ஆன்லைனில் பதிவு செய்திருந்தால் மட்டுமே லாரிகளுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் இந்த திடீர் கெடுபிடியால் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தகுதிச் சான்றிதழ் பெறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்படுவதால் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் லாரிகளுக்கு, ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தகுதிச் சான்றிதழ் தர மறுப்பதால், அந்த வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, தற்போது 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் குறிப்பிட்ட சில ரக லாரிகள், தகுதிச் சான்றிதழ் பெற வரும்போது அவை மட்டுமாவது வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தியிருக்க வேண்டும் என ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்குப் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், ''லாரி ஸ்டிரைக்கின்போது போடப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் அதிகாரிகள் லாரிகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். இதைக் கண்டித்துப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தற்போது 80 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் குறிப்பிட்ட மாடல் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற லாரிகளுக்கு தேவையில்லை எனக் கூறியுள்ளனர்'' என்றார்.