திருச்சி தமிழ்நாடு காவல் பயிற்சி மையத்தில் ஆயுதப் படையின் ஏடிஜிபி ஜெயராம் இன்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது முதலாவதாக ஒட்டுமொத்த பயிற்சி மையத்திற்கும் தேவையான காவேரி குடிநீர் இணைப்பைத் தொடங்கி வைத்து அதற்கான கல்வெட்டைத் திறந்து வைத்தார். பின்னர் பயிற்சி மைய வளாகத்திற்குள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மேலும் சென்னையிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவின் ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் சூசைராஜ் ஆகியோர் தலைமையில் திருச்சிக்கு வந்துள்ள 120 வீரர்களும் இணைந்து நடத்திக் காட்டிய மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கமாண்டன்டுகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். இதில் மொத்தம் 9 பட்டாலியன்களின் கமாண்டன்டுகள், 10 துணை கமாண்டன்டுகள், 8 உதவி கமாண்டன்டுகள் பங்கேற்றனர். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திருச்சி கமாண்டன்ட் ஆனந்தன் தலைமை தாங்கினார்.