Skip to main content

லஞ்சம் பெற்றபோது பிடிபட்ட வட்டார இயக்க மேலாளர்! 

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

Regional operations manager caught while receiving bribe!


திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் கண்ணுடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர், அவரது ஊரில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக் குழுவுக்கு தலைவராக உள்ளார். இக்குழுவில் விவசாய கூலி வேலை செய்யும் 12 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவினருக்கு அரசால் தாட்கோ நிறுவனத்தின் மூலம் கறவை மாடு வாங்கி சுயதொழில் செய்வதற்காக 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

 

இந்த ஐந்து லட்ச ரூபாய்க்கு மானிய தொகையாக இரண்டரை லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை பெற்று வழங்குவதற்காக மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கி வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், வட்டார இயக்க மேலாளராக பணிபுரியும் மல்லிகாவை சந்தித்துள்ளார். அப்போது மல்லிகா, சுய உதவிக் குழுவிற்கு மானிய தொகை பெற்று தருவதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கடனுதவி பெற்று தர இயலும் என்று கூறியுள்ளார்.  

 

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜலட்சுமி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் நேற்று 16.8.2022 மதியம் ராஜலட்சுமியிடமிருந்து வட்டார இயக்க மேலாளர் மல்லிகா ரூ.12 ஆயிரம் லஞ்சமாக பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்