தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. பல இடங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று உந்துதல் குறைவாக இருந்ததால் அழுத்தம் ஏற்படாமல் வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி உருவாகவில்லை. காற்று சுழற்சி காரணமாக, தற்போது கனமழை பெய்துவருகிறது. நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று (25/11/2021) மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். எனவே, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடிக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அது 'ரெட் அலர்ட்' என மாற்றப்பட்டுள்ளது. அதிக கனமழை பொழியும் என்பதால் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் கடந்த 8 மணிநேரத்தில் மட்டும் அதிகபட்சமாக18 சென்டி மீட்டர் மழை கொட்டியுள்ளது.