தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் நிரம்ப ஆரம்பித்துள்ளன. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கவிநாடு கண்மாய் நிரம்பியுள்ளதால், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்மாயைப் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “12 ஆண்டுகளுக்குப் பிறகு கவிநாடு கண்மாய் நிரம்பியுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் 61 லட்ச ரூபாய் மதிப்பில் இந்தக் கண்மாயில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றன. தற்போது இந்தக் கண்மாய் நிரம்பி வழிவதற்கு அதுதான் காரணம். என்றும் இது விவசாயிகளுக்கும், ஆயக்கட்டுக்காரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது மழையினால் ஏற்பட்ட பெரு வௌ்ளத்தில் அரசு நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் பொதுமக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மழைக் காலங்களில் வௌ்ள நீர் தேங்கி நிற்கிறது. நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் காய்ச்சிய நீரைத்தான் பருக வேண்டும். எந்த உணவையும் நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.