Skip to main content

வீடு புகுந்து ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!   

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Real estate person passes away in trichy police investigation

 

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து சங்கர் சோலையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்துவருகிறார். இவர், மல்லியம்பத்து பஞ்சாயத்துத் தலைவர் புவனேஸ்வரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். 

 

இந்நிலையில், நேற்று (28.11.2021) மாலை 6 மணியளவில் சிவக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டிற்குள் இரண்டு நபர்கள் அத்துமீறி நுழைந்து கண்ணிமைக்கும் வேளையில் அவர்கள் கொண்டுவந்த சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் கொலை தொடர்பாக அவரது மனைவி மைதிலி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘என் கணவர் சிவக்குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன், ராஜீவ் காந்தி நகரில் உள்ள செங்கல் சூளை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினார். அதற்கு என் கணவரும் உடந்தை என எங்கள் ஊரைச் சேர்ந்த பழனியாண்டி மகன் கதிர்வேல், பிரபல தொழிலதிபர் நாகராஜ் மகன் பிரபாகரன் என்கிற மருதராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோர் ஊரில் பிரச்சனை செய்துகொண்டிருந்தனர்.

 

அந்த விரோதம் காரணமாக நேற்று மாலை பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எங்கள் வீட்டு முன்பு நின்று என் கணவரை வரவழைத்து கட்டையால் தலை, காது, பின்னந்தலை ஆகிய இடங்களில் தாக்கினர். தடுக்கச் சென்ற என்னிடம், ‘அடுத்து விக்னேஸ்வரன்தான்’ எனச் சொல்லிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். என் கணவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பார்த்தபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே என் கணவரை கொலை செய்த பிரபாகரன் தீபக் மற்றும் கொலைக்குக் காரணமான கதிர்வேல் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இந்தக் கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டை ஒட்டியுள்ள இடத்தைப் பெறுவது தொடர்பாக சிவகுமாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது தெரியவந்தது. மேலும், மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இந்தக் கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் கதிர்வேல் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். சிவகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.