வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் மீது 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தது. அண்மையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையில் ஆ.ராசா உட்பட நான்கு பேர் வரும் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், விஜய் சடரங்கனி உள்ளிட்ட 4 பேரும், அதேபோல் கோவை ஷெல்டர்ஸ், மங்கல் டெக் பார்க் என்ற 2 நிறுவனமும் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி வழக்கு விசாரணையை ஜனவரி 10ஆம் தேதி தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில் கோயம்புத்தூரில் ஆ.ராசாவின் பினாமி பெயரிலான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளார் என தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, பினாமி பெயரில் வாங்கப்பட்ட 55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற பணத்தின் பினாமி பெயரில் ஆ.ராசா நிலத்தை வாங்கி உள்ளார் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ED has provisionally attached 45 acres of land in Coimbatore, Tamil Nadu worth Rs. 55 Crore purchased in the name of a Benami Company of A. Raja, former Cabinet Minister, Ministry of Environment & Forest during the period 2004-2007.
— ED (@dir_ed) December 22, 2022