சேலம் அருகே, ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அருகே உள்ள கருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் சென்றன. அதையடுத்து, சேலம் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர், கருப்பூர் அருகே வெள்ளைக்கல்பட்டி பழைய காலனி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில், வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 2,100 கிலோ ரேஷன் அரிசி இருப்பதும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்குக் கடத்திச் செல்ல இருப்பதும் தெரிய வந்தது. ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வாகனத்தில் இருந்த மூன்று பேரிடம் விசாரித்தனர். அவர்கள், சேலம் மாவட்டம் சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமஜெயம் (வயது 50), உடையாப்பட்டியைச் சேர்ந்த தீபன்ராஜ் (வயது 23), சுதர்சன் (வயது 23) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் நீண்ட காலமாக, கருப்பூர், வெள்ளைக்கல்பட்டி பகுதிகளில் ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை வெளிமாநிலங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.