வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 18ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15, 16 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17, 18 ஆகிய நாட்களில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் கடல் பகுதி 100 மீட்டர் அளவிற்கு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்தில் கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள், சாமி சிலைகள் காணப்படுகிறது. அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்குள்ளே இருந்த பழைய சுவாமி சிலைகள், பவளப்பாறைகள் வெளியில் தெரிகிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிசல்முனை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைக் காண திரிவேணி சங்கமத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். ஆனால் மழை காரணமாக சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.