
அண்மையில் இராமநாதபுரம் மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த மீனவப் பெண் ஒருவர் கடல்பாசி எடுக்க சென்ற பொழுது வடமாநிலத்தவர்கள் இரண்டு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவர்களை இது தொடர்பாக விசாரித்த பொழுது பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரிய வந்து, அந்த இறால் பண்ணைக்கு மக்கள் தீவைத்தனர். அந்த பகுதியில் இதுபோல பல இறால் பண்ணைகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், அங்கு வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் தங்களது ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன் எண், ஆதார் அட்டை, பணிபுரியும் நிறுவனப் பெயர், முகவரி போன்ற விவரங்களை வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் தர நகராட்சி தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.