Skip to main content

“தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது” - ராமதாஸ்

Published on 27/02/2025 | Edited on 27/02/2025

 

ramadoss  number of Lok Sabha seats in TN should not be reduced

மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் 2026 ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டிய மத்திய அரசு, மக்களிடம் மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை வெளியிடக்கூடாது.

மக்களவைத்  தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; தொகுதிகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த வேண்டும் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வருகிறேன். அதன் நோக்கம் தமிழ்நாட்டிலிருந்து மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் செல்ல வேண்டும்; தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக அவர்கள் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என்பது தான். ஆனால்,  மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என்றும், அதனடிப்படையில்  தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதைய அளவில் 39 இல் இருந்து 32 அல்லது 31 ஆக குறைக்கப்படக் கூடும் என்றும் வெளியாகியிருக்கும் செய்திகள் மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்வது சரியானது அல்ல; அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. 50 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை பெருக்கத்தால் இந்தியா பல சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், மக்கள்தொகையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது; அதற்காக மத்திய அரசால் பல்வேறு ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன. வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட தென் மாநிலங்களும் மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தின.  அதனால் தென் மாநிலங்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நன்மை கிடைத்தது. அதற்கான பரிசாக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர, குறைக்கப்படக்கூடாது. அது மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தண்டிப்பதாக அமைந்து விடும். அது தவறு.

அதுமட்டுமின்றி, இந்தியா பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அந்த வகையில் பார்க்கும் போது, அனைத்து மாநிலங்களுக்குமான மக்களவைப் பிரதிநிதித்துவம் ஒரே வகையிலான விகிதத்தில் அமைய வேண்டும். எந்த ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் விகிதாச்சாரமும் மாற்றப்படக் கூடாது. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாக இருந்தாலும் பொது விகிதாச்சாரம் எந்த வகையிலும் மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அது தான் ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும்.

எடுத்துக்காட்டாக நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 33% உயர்த்தப்படுவதாக வைத்துக் கொண்டால், தமிழக தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 39 உடன் கூடுதல் தொகுதிகள் 13 சேர்த்து 52 ஆக உயர்த்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக 32 உடன் கூடுதலாக 10 அல்லது 11 சேர்த்து 42 அல்லது 43 ஆக உயர்த்தப்படும் என்பது தான் தமிழக மக்களிடம் நிலவும் அச்சம் ஆகும்.

இந்த முறையில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக கிடைக்க வேண்டிய 52 தொகுதிகளை விட 10 தொகுதிகள் வரை குறைவாகக் கிடைக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இது தொடர்பாக அளித்துள்ள விளக்கம் தெளிவாக இல்லை. தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஐ விட குறையாது என்று தான் கூறியிருக்கிறார். மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு அதிகரிக்கப்படுகிறதோ, அதே விழுக்காடு தமிழக தொகுதிகளும் அதிகரிக்கப்படும் என்று அவர் கூறவில்லை. அதனால் அந்த விளக்கத்தை ஏற்க முடியாது.

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை இப்போதுள்ள அளவில் தொடர்ந்தால் தமிழகத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆக தொடர வேண்டும். மூன்றில் ஒரு பங்கு உயர்த்தப்பட்டு 721 ஆக உயர்த்தப்பட்டால் தமிழகத் தொகுதிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்த்தப்பட வேண்டும். ஒருவேளை மக்களவையில் இப்போதுள்ள இருக்கைகளின் அடிப்படையில் 888 ஆக உயர்த்தப்பட்டால், தமிழகத்தின் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் அதே விகிதத்தில் 64 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20% தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை ஒரு போதும் குறையாது என்று தமிழக மக்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.

அதேநேரத்தில் மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறையை எந்த அடிப்படையில் செய்வது என்பது குறித்து எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை. அது தெரியாமல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை எடுக்க முடியாது. மத்திய அரசின் முடிவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உத்திகளை வகுப்பது தான் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். அதேநேரத்தில் மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கும். தமிழக அரசின் சார்பில் மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்