நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள், டிசம்பர் 12. தற்போது, 71வது பிறந்தநாளை தொடங்கியிருக்கும் ரஜினிக்காக, தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட ரஜினியின் பிறந்தநாள் விழா, இந்தாண்டு ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் முதல் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் வரை புதுப் பொலிவுடன் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் ரஜினி மக்கள் மன்ற மா.செ ரவி தலைமையில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அந்தந்த பகுதி ஒன்றிய, நகரச் செயலாளர்கள் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. ரத்ததான விழா, ஏழைகளுக்கு உணவு வழங்குதல், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குதல், கோவில்களில் சிறப்புப் பூஜைகள் என ரசிகர் மன்ற நிர்வாகிகள் பெரிய அளவில் கொண்டாடினர்.
கடந்த ஆண்டுகளில், தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள குறிப்பிட்ட நிர்வாகிகள் உள்ள பகுதிகளில் மட்டுமே ரஜினி பிறந்தநாள் விழா நடைபெறும். இந்தாண்டு ஒவ்வொரு தொகுதி, நகரம் வாரியாக நடைபெற்றுள்ளன. இதுபற்றி பேசும் அரசியல் விமர்சகர்கள், தேர்தல் வருகிறது, தங்களது பலத்தைக் காட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நினைக்கிறார்கள். அதனால், ஒவ்வொரு பகுதியிலும் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள். ஆனால், ரஜினி, கட்சி தொடங்கி தன் கட்சி நிர்வாகிகள் 50 சதவிகித நபர்களுக்கு சீட் தந்தாலே பெரிய விஷயம் என்கிறார்கள்.
காரணம், அவரைச் சுற்றி தற்போது மன்றத்துக்கு அப்பாற்பட்டவர்கள் குவிகிறார்கள். அவர்களுக்குத் தான் அவர் முக்கியத்துவம் தருவார், அப்படியிருக்கும்போது பாதிக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு சீட் என்பது எட்டாக்கனி என்கிறார்கள்.