மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தத வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து, இன்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 8 வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அவரை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி முகமது பரூக், ராஜகோபாலனை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது.
மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, ராஜகோபாலன், சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜாமீன் கோரி ராஜகோபாலன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி, நாளைக்கு தள்ளி வைத்துள்ளார்.