வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் சென்னையிலிருந்து 480 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ச்சியாக 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் நேற்று விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையில் பல இடங்களில் மீண்டும் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை ராயப்பேட்டை ஔவை சண்முகம் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்காக (மரம் விழுதல், மின்சாரம் துண்டித்தல், நீர் தேங்குதல்) புகார்கள் குறித்துத் தெரிவிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பிரத்தியேக சிறப்பு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை நெருங்கும் போது புயலின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.