வேலூரில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பொழிந்துவரும் நிலையில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பெய்த மழை மற்றும் அங்கிருந்த காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மசூதி தெருவில் ஒரு குடும்பத்தினர் பாதுகாப்பிற்காக பர்கூஸ் என்பவரது வீட்டில் மழைக்காலங்களில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், நேற்றிரவும் (18.11.2021) மழை காரணமாக அவரது வீட்டில் தங்கியுள்ளனர். மொத்தமாக நேற்றிரவு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் அந்த வீட்டில் படுத்துறங்கிய நிலையில், இன்று காலை வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயத்துடன் மீட்கப்பட்ட 9 பேர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பார்வையிட்டுவருகிறார். நான்கு குழந்தைகள், பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கனமழையால், வீடு இடிந்து பலமணி நேரம் கழித்தே அப்பகுதி மக்களுக்கு இந்த விபத்து குறித்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.