Skip to main content

ஆறு மணி முதலே தொடங்கிய ரெய்டு... மாமனார், தம்பி, தங்கை உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

The raid started at six o'clock, on the houses of father-in-law, brother and sister

 

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான 43 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றுவருகிறது. விராலிமலை அருகே இலுப்பூரிலும் சுற்றுவட்டார ஊர்களிலும், அவருடைய மாமனார், தங்கை, தம்பி  உள்ளிட்ட உறவினர்களின் வீடுகளிலும் காலை 6 மணி முதல் சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில் 2016 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 2021 மார்ச் 31 வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22லட்சத்து 56,736 ரூபாய் சொத்து சேர்த்ததாக சி. விஜயபாஸ்கர் மீதும், அவருடைய மனைவி ரம்யா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இவர், அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களையும் நடத்திவந்துள்ளார். அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர் கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்திவருகிறார். இவர், பதவிக்காலத்தில் ரூ. 6.6 லட்சத்துக்கு டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜே.சி.பி., ரூ. 53 லட்சத்துக்குப் பி.எம்.டபிள்யூ. கார், ரூ. 40 லட்சம் மதிப்பிலான நகைகள், காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ. 4 கோடிக்கு விவசாய நிலங்கள், சென்னை தியாகராயர் நகரில் ரூ. 15 கோடிக்கு வீடு, அமைச்சராக இருந்தபோது பல நிறுவன பங்குகளை ரூ. 28 கோடிக்கு வாங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளது.

 

அதேபோல், அமைச்சராக இருந்தபோது தனது மனைவி, 2 மகள்கள் மற்றும் அவரது பெயரில் ரூ. 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வருமான வரித்துறை கணக்கின்படி 5 ஆண்டுகளில் சி. விஜயபாஸ்கரின் வருமானம் ரூ. 58.65 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ. 34.5 கோடி செலவு செய்துள்ளார். சி. விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ. 24 கோடி மட்டுமே சேமித்திருக்க முடியும். ஆனால், வருமானத்தை மீறி ரூ. 27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.