வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து சோதனையில் ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இன்று (18.10.2021) காலை 7 மணியிலிருந்து இந்த சோதனை நடைபெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் உள்ள அவரது வீடு, அதேபோல் அவரது உறவினர்களுடைய வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்து விவரங்கள் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.