மாமல்லபுரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட ரேடிசன் ப்ளூ ஹோட்டலுக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. மாமல்லபுர கடற்கரையில் ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் சி.ஆர்.இசட் அனுமதியைப் பெறாமல் கட்டப்பட்டது என சென்னையைச் சேர்ந்த மீனவ செயற்பாட்டாளர் எம்.ஆர். தியாகராஜன் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட கட்டடங்களை இரண்டு மாதங்களுக்குள் அந்த நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும் என தீர்ப்பளித்தது.
அவ்வாறு ரேடிசன் ப்ளூ நிறுவனமே அகற்றாவிட்டால், மாசு கட்டுப்பாடு வாரியம் அகற்றும் என தெரிவித்தார். மேலும், அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10 கோடி ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு கடற்கரை மண்டல ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தார். கடற்கரையில் இருந்து 200 முதல் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் கட்டடங்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசை அணுகலாம் என குறிப்பிட்டுள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், அதுவரை அந்த கட்டுமானங்களைப் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது.