மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து, தமிழ் மொழி பண்பாட்டு வளர் நிலைகளை சிதைத்து சீர்குலைக்கும் செயல்பாடுகளைத் திட்டமிட்டே செய்துவருகிறது. அதில் ஒன்றுதான் தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களை மூடும் முடிவு... இதைக் கண்டித்து மொழி, கலை பண்பாட்டு தளத்தில் முன்னணி அமைப்பாக இயங்கிவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் இரா. காமராசு விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய வானொலி, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகியவற்றுடன் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய நிலையங்களில் இருந்தும் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.
பல்வேறு தனியார் பண்பலை வானொலிகளின் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துவரும் நிலையில், நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, அனைவருக்கும் பொதுவான - அதேநேரத்தில் ஒவ்வொரு பகுதிக்குமான பிரத்யேக கலை வடிவங்களையும் அரங்கேற்றும் வகையிலான அரசு ஊடகமான அகில இந்திய வானொலி, படிப்படியாகத் தேய்ந்தே வந்துகொண்டிருக்கிறது.
காலத்துக்கேற்ப நிகழ்ச்சிகளை அதிகரித்தும், தரப்படுத்தியும் தர வேண்டும் என்ற இயல்பான கோரிக்கை இலக்கிய, பண்பாட்டுத் தளத்தில் எழுந்துவரும் நிலையில், இதற்கு நேரெதிராக வானொலி நிலையங்களை ஏறத்தாழ மூடும் முடிவை மத்திய அரசு நிறுவனம் எடுப்பது என்பது வருத்தம் தரும் தகவலாகும்.
குறிப்பாக, சென்னை தவிர்த்த இதர வானொலி ஒலிபரப்புகளை நிறுத்திவிட்டு, அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து சென்னையிலிருந்தே பெரும்பாலான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான சுற்றறிக்கைகள் ஒருபக்கம், வானொலி நிலையத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றிவரும் பணியாளர்களை அச்சப்படுத்தியுள்ளது.
இந்த முடிவுகளை அகில இந்திய வானொலி நிர்வாகம் - பிரசார் பாரதி நிறுவனம் - கைவிட வேண்டும். தமிழ் ஒலிபரப்புகளை இன்னும் தேவைக்கேற்ப தரப்படுத்தவும், அதிகரிக்கவுமான யோசனைகளை முன்வைக்க தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து, ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோருகிறது." என கூறியுள்ளார்.