Skip to main content

கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைக்கலாமா? ஆய்வுகுழுவிடம் நிலமையை சொன்ன மக்கள்!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

தமிழகஅரசு திருவையாறு அருகில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள வல்லுநர்குழுவினர் ஆய்வுசெய்தனர். அவர்களிடம் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள்  ஒவ்வொருவரும் தனித்தனியே மனுக்களை கொடுத்து அரசுக்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுத்துள்ளனர்.

 

​ sand

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசுத் திட்டமிட்டு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டது. அதற்கு  அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து, ஆற்றில் குடியேறுதல், அரசு அதிகாரிகளை சிறைப்பிடித்தல், மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்தல் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். அதோடு இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடுத்தனர். 

 

 

அந்த வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி, நியமிக்கப்பட்ட தமிழ்நாடு சாலைப்பிரிவு திட்ட இயக்குநர் அருண்தம்புராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கணபதி சுப்பிரமணியன்,  விலங்கியல் பேராசிரியர் புகழேந்தி  உள்ளிடோர் கொண்ட குழுவினர் விளாங்குடியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு செய்தனர். 

 

sand

 

இதை தெரிந்துகொண்ட அப்பகுதிமக்கள் நூற்றுக்கும் அதிகமானோர், அதிகாரிகளிடம், ‘’ இங்கு குவாரி அமைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி ஒவ்வொருவரும் மனுக்களை அளித்தனர். அதில் ’’ஐயா இங்கு மணல் குவாரி அமைத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்,  குடிநீருக்கே தண்ணீர் கிடைக்காமல் போய்விடும்    ஆடு, மாடுகள் பாதிப்புக்குள்ளாகும்,  நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலும் பாழாகி பல மடங்கு ஆழத்துக்குச் சென்று விவசாயம்  முழுமையாக அழிந்துவிடும். எங்கள் தொகுதியில் உள்ள அமைச்சரான வேளாண்மை துறை அமைச்சரின் சுயநல பணவெறியில் மக்களின் நலனை யோசிக்காமல், சுயநலத்துடன் செயல்படுகிறார். அவர் எங்கள் தொகுதியில் இருப்பதே சாபக்கேடாக நினைக்கிறோம், நாங்கள் அவரை நம்பவில்லை, மாறாக சட்டத்தையும் உங்களையும் நம்பியிருக்கிறோம், எங்களின் அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள் என குறிப்ப்ட்டதோடு விளக்கினர்.

 

பொதுப்பணித்துறை அதிகாரிகளோ இதைசற்றும் எதிர்ப்பார்த்திடவில்லை, இனிஎன்ன செய்வது என்கிற அடுத்தக்கட்டயோசனையில் இருக்கிறது அரசு. ஆய்வுகுழுவோ இங்கு நடந்ததை அப்படியே மேலே சமர்ப்பிப்பேன் என குறிப்பிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; மேலும் மூன்று பேர் கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tanjore Massacre; Three more people were arrested

தஞ்சையில் நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்ட போலீசார் விசாரணை செய்து திருச்செல்வம், சின்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதே சம்பவத்தில் மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பல்லடம் போலீசார் திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பிவைத்ததால் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

டெல்டாவில் தொடரும் மழை; அணைகளின் நிலவரம்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Continued rain; Status of dams

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மேலும் சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தஞ்சை அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் மயிலாடுதுறையில் மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், அம்பாசமுத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகையில் நாகூர், சிக்கல், பொரவச்சேரி, திருமருகல், போலகம், நரிமணம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

கன்னியாகுமரியில் சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து குறைந்ததால் நான்கு நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருகில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நான்காவது நாளாக குளிக்கத் தடை நீடிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 139.85 அடி அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2,023 கன அடியாக உள்ளது. அணையில் நீர் திறப்பு 300 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 7,088 மில்லியன் கன அடியாக உள்ளது. அதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. நீர்வரத்து 2,187 கன அடியாக உள்ளது. அணையின் நீர் திறப்பு வினாடிக்கு 2,319 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 5,681 மில்லியன் கன அடியாக உள்ளது.