தள்ளாத வயதிலும் பனை மரம் ஏறி, நுங்கை இறக்கி, கடைவீதியில் விற்பனை செய்யும் முதியவரை நக்கீரன் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் இவரைப் பற்றி நாம் செய்தி வௌியிடுகிறோம். சுமார் 95 வயதுக்கு மேற்பட்ட 'இளைஞர்', இந்த வருடமும் பனை மரத்தில் ஏறி நுங்கை இறக்கி வந்து விற்பனை செய்கிறார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முதிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 96). மனைவி மகன்களுடன் வாழ்ந்தவர். மனைவி இறந்த பிறகு, தனியாக ஒரு கொட்டகையில் வசித்து வருகிறார். இளம் வயதில் பனை மரம் ஏறி நுங்கு, மட்டைகள் இறக்குவது, பனைமட்டைகளில் வீடுகள் கட்டிக்கொடுப்பது போன்ற வேலைகளை செய்துள்ளார்.
அதேபோல, தென்னை மரங்களில் ஏறி கூலிக்குத் தேங்காய் பறித்துக்கொடுப்பதும் இவரது வேலையாக இருந்தது. வயதான பிறகு யாரும் மரங்கள் ஏற அழைப்பதில்லை என்பதால், தென்னங்கீற்று பின்னி விற்பனை செய்து வருகிறார். இந்த தள்ளாத வயதிலும் கோடை காலத்தில் பனை மரங்களில் ஏறி நுங்கு இறக்கி, மூட்டையாக கட்டி, சைக்கிளில் ஏற்றி தள்ளிக்கொண்டே 2 கி.மீ கொண்டு வந்து கடைவீதியில் விற்பனை செய்து வருகிறார்.
தனி ஆளாக பனை மரத்திலிருந்து நுங்கு இறக்கும் முதியவர், தனி ஆளாகவே சைக்கிளிலும் ஏற்றி வந்து ரூ. 5க்கும், ரூ. 10க்கும் விற்பனை செய்து வருகிறார். முதியவர் நுங்கு விற்க வரும்வரை காத்திருந்து நுங்கு வாங்கிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள். சிறுவர்கள் வந்தால் பணம் வாங்காமல் நுங்கு கொடுத்து அனுப்புகிறார். தெரிந்தவர்கள் வந்தாலோ அல்லது அவரை நலன் விசாரித்தாலோ அவர்களுக்கும் இவசமாக நுங்கு கொடுத்து உபசரிக்கும் செல்லையா, அவர்களை விருந்தாளியாகவே பார்த்து அருகில் உள்ள கடைகளில் சாப்பிடவும் சொல்கிறார். யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்குவதில்லை. அதே நேரத்தில் யார் வந்தாலும் அன்பாக உபசரிப்பது பொதுமக்களைக் கவர்ந்திழுக்கிறது.
முதியவர் செல்லையா கூறும்போது.. “பனை மட்டைகளில் வீடுகட்டுவது குறைந்ததும் தென்னை மரம் ஏறி பறித்துக்கொடுத்து கூலி வாங்குவேன். வயதானதால அந்த வேலைக்கும் யாரும் அழைப்பதி்லை. அப்பறம் பல வருடங்களாக தொடர்ந்து பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பனை செய்றேன். போன வருசம் இதே நாளில் என்னைப் பற்றிய தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அம்மா முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்தார். ஆட்சியரின் நடவடிக்கையால் ஒரு வருடமாக உதவித் தொகை கிடைக்கிறது. அந்தப் பணம் எனது செலவுக்குப் போதுமானதாக உள்ளது. என் உடல் தளரும்வரை பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பேன். கீற்றும் பின்னுவேன்” என்றார் திடமாக. முதியவரின் இந்தத் திடமான உழைப்பை பார்த்து பலரும் அவரை பாராட்டிச் செல்கின்றனர்.